LIVING WATER -PART:1
*Jesus is the Living Water. His words in the gospel provide us the living water!*
*1. முன்னுரை: துவக்கத்திலேயே அறிந்துகொள்வோமா!*
நமக்கு இந்த படிப்பினையின் மூலம் கிடைக்கும் நல்ல செய்தி என்னவென்றால் இந்த உலகத்திலேயே நமக்கு வல்லமை மிகுந்த ஜீவத்தண்ணீர் கிடைக்கிறது. பரலோகத்தில் வாசம் பண்ணும் பரிசுத்தவான்கள் பருகும் அதே ஜீவத்தண்ணீர் நமக்கு இங்கேயே இலவசமாகக் கிடைக்கிறது. இயேசுதான் ஜீவத்தண்ணீரை நமக்குத் தருகிறவர். அவரே ஜீவத்தண்ணீர். அவருடைய வசனமே ஜீவத்தண்ணீர். இந்த ஜீவத்தண்ணீர் மட்டுமே நமக்கு நித்திய ஜீவனைத்தருகிறது. 2000 வருடங்களுக்கு முன்னர் அவர் இஸ்ரவேல் தேசத்தில் நடையாய் நடந்து இந்த ஜீவத்தண்ணீரை வாரி வழங்கினார். அது இன்றுவரை ஓடிக்கொண்டிருக்கிறது. இயேசுவின் வசனமே ஜீவத்தண்ணீர்! மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் ஆகிய 4 சுவிசேஷப் புத்தகங்களில் இந்த ஜீவத்தண்ணீர் நமக்கு அள்ள, அள்ளக் குறையாமல் கிடைக்கிறது. இந்த ஜீவத்தண்ணீர் பாயுமிடமெல்லாம் நித்திய ஜீவனும், ஆராேக்யமும் இருக்கிறது. இதனை வசனங்கள் மூலம் கண்டறிவோமா?
*2. இந்த உலக வாழ்விலேயே நமக்கு ஜீவத்தண்ணீர் கிடைக்கிறதா?: ஒரு உரத்த சிந்தனை.*
2.1 ஜீவத்தண்ணீர் என்று நாம் வசனங்களில் பார்க்கிறோமே, அது இந்த உலக வாழ்விலேயே நமக்குக் கிடைக்கிறதா? அந்த ஜீவத் தண்ணீர் இயேசுவின் வசனம்தானா! அது எப்படி, நாம் இந்த உலகத்திலிருக்கும்போதே ஜீவத்தண்ணீரைப் பருக முடியுமா? அல்லது மரித்துப் பரலோகம் போனபின்னர்தான் நமக்கு ஜீவத்தண்ணீர் கிடைக்குமா? ஜீவத்தண்ணீர் என்றவுடன் நமக்கு ஞாபகம் வருவது பரலோகம், ஏதேன் தோட்டம், வெளிப்படுத்தின விசேஷம் என்பதுதான். ஜீவத் தண்ணீர் குறித்து சத்தியம் என்ன சொல்கிறது? இயேசு ஜீவத்தண்ணீரை இங்கேயே தருவதற்கு சமாரிய ஸ்திரியிடம் வாக்குத்தத்தம் செய்துள்ளார், _நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருக்காலும் தாகமுண்டாகாது_ என்று வாக்குக் கொடுத்தார். அதன்பின்னர் இரண்டு நாள் அங்கே அவர்களுடன் தங்கியுள்ளார். சமாரியர்கள் சுவிசேஷத்தை ஏற்றுக் கொண்டனர் (யோவான் 4:40-42). நித்திய ஜீவனை சுதந்தரித்துக் கொண்டனர். ஜீவத்தண்ணீராகிய இயேசுவைப் பருகினர், நித்திய ஜீவனைக் கண்டடைந்தனர்.
*3.0 ஜீவத்தண்ணீர் இப்போதே நமக்குக் கிடைக்கிறதா! என்று என்னை சிந்திக்க வைத்த வசனங்கள் இவைகளே!*
*3.1 அடிப்படை வசனம் #1*
யோவான் 4:10 இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: நீ தேவனுடைய ஈவையும், *தாகத்துக்குத்தா என்று உன்னிடத்தில் கேட்கிறவர் இன்னார் என்பதையும் அறிந்திருந்தாயானால், நீயே அவரிடத்தில் கேட்டிருப்பாய், அவர் உனக்கு ஜீவத்தண்ணீரைக் கொடுத்திருப்பார் என்றார். 13. இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: இந்தத் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கு மறுபடியும் தாகமுண்டாகும். 14. நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருக்காலும் தாகமுண்டாகாது; நான் அவனுக்குக் கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே நித்தியஜீவகாலமாய் ஊறுகிற நீரூற்றாயிருக்கும் என்றார்.*
3.2 _"நீயே அவரிடத்தில் கேட்டிருப்பாய், அவர் உனக்கு ஜீவத்தண்ணீரைக் கொடுத்திருப்பார்"_ என்ற இந்த வசனத்தின்படி பார்த்தால் இயேசு மனிதர்களுக்கு இந்த உலகத்தில் வைத்தே ஜீவத்தண்ணீரைக் கொடுக்கிறார் என்று அர்த்தம்தானே! இதில் கீழ்க்கண்ட இரண்டு சத்தியங்களும் அடங்கியுள்ளனவே!
1) "நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருக்காலும் தாகமுண்டாகாது" என்று இயேசு கூறியதிலிருந்து இயேசு தரும் ஜீவத்தண்ணீரைக் குடிப்பவனுக்கு / குடிப்பவளுக்கு ஒருக்காலும் தாகமுண்டாகாது.
2) அந்த ஜீவத்தண்ணீர், “அவனுக்குள்ளே நித்தியஜீவகாலமாய் ஊறுகிற நீரூற்றாயிருக்கும்". அதாவது இது மனிதனுக்குள் இருந்து ஊறும் நீரூற்று. அது நிற்கவே செய்யாது என இயேசு கூறியுள்ளார்! பரிசுத்த ஆவிதானே நமக்குள் இருக்கிறார்? (யோவான் 14:16-17, 1 கொரிந்தியர் 6:19). பரிசுத்த ஆவியானவரின் கிரியைகள்தான் அந்த நீரூற்றா?
*3.3 இரண்டு கேள்விகள் எழுகிறதே!*
1) ஒருக்காலும் தாகமுண்டாகாது என்று இயேசு சொல்கிறாரே அது என்ன தாகம்? மெய்யான தெய்வமாகிய கிறிஸ்துவைக் கண்டுபிடித்தவுடன் வருகிற நிரந்தர திருப்தியா? அதாவது இனி நான் உண்மையான தெய்வத்தைக் கண்டுபிடிக்கத் தேட வேண்டியதில்லை என்ற ஆத்துமாவின் திருப்தியா?
இதோ ஒரு வசனம். என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் ஒருக்காலும் தாகமடையான் என்று இயேசுவே கூறியுள்ளார்.
யோவான் 6:35 இயேசு அவர்களை நோக்கி: ஜீவ அப்பம் நானே, என்னிடத்தில் வருகிறவன் ஒருக்காலும் பசியடையான், என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் ஒருக்காலும் தாகமடையான்.
அதாவது இனி என்னை சிருஷ்டித்த தேவனை என் ஆத்துமா தேடிக்கொண்டு அங்கலாய்க்க வேண்டியதில்லை என்று இந்த வார்த்தைக்கு அர்த்தம் கொள்ளலாம்தானே! இயேசுவின் வசனங்களுக்கு அந்த வல்லமை உள்ளதுதானே! இயேசுவின் வசனங்கள்தானே நித்திய ஜீவன் தருகிறது!
இயேசுவிடம் வந்தால் நமது வருத்தங்கள்/பாரசுமைகள் நீங்கிவிடும் என அழைப்பு விடுத்துள்ளாரே!
*மத்தேயு 11:28. வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.*
இயேசுவிடத்திலும் அவருடைய வசனங்களிலும் இளைப்பாறுதல் உள்ளதே. தாகம் தீர்க்கப்படுகிறதே! இதற்குப் பின் தேடுதல் தேவையா?
2) அந்த ஜீவத்தண்ணீரைக் குடித்தவுடன் “அவனுக்குள்ளே நித்தியஜீவகாலமாய் ஊறுகிற நீரூற்றாயிருக்கும்" என்கிறாறே அது என்ன? அந்த நீரூற்று எது? அது இயேசுவின் சுவிசேஷம்தானா? இயேசு ஊர் ஊராய், பட்டணம் பட்டணமாய் நடந்து பிரசங்கம் பண்ணியது அவரது சுவிசேஷத்தைத்தானே! இயேசு நம்மையும் அவருடைய சுவிசேஷத்தைத்தான் உலகம் முழுக்க பிரசங்கம் பண்ணக் கோரியுள்ளார்? (மாற்கு 16:15, மத்தேயு 24:14, மத்தேயு 28:18-20) அந்த சுவிசேஷத்தைப் பிரசங்கம் பண்ணும்போது இயேசு அதனை அற்புத அடையாளங்களினாலே உறுதிப்படுத்துவார் என்று நாம் மாற்கு 16:20ல் படிக்கிறோமே! சுவிசேஷம் என்பது இயேசுவைப்பற்றிய வசனங்களைப் பிரசங்கிப்பது, அத்தோடு வியாதிகளைக் குணப்படுத்திப் பேய்களை ஓட்டுவது ஆகிய இரண்டும் சேர்த்து என்றுதான் நாம் அர்த்தம் கொள்ள வேண்டும். இந்த சுவிசேஷம்தானே நித்திய ஜீவனை ஒருவனுக்குத் தருகிறது! இயேசு இதைத்தான் பூமியில் ஊழியம் செய்யும்போது செய்தார். அப்படியானால் அற்புத அடையாளங்களினால் இயேசுவின் சுவிசேஷம் ஒருவனிடமிருந்து வெளிவருதுதான் நித்தியஜீவகாலமாய் ஊறுகிற நீரூற்றா?
*3.4 நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்.*
மத்தேயு 5:13. நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள்; உப்பானது சாரமற்றுப்போனால், எதினால் சாரமாக்கப்படும்? வெளியே கொட்டப்படுவதற்கும், மனுஷரால் மிதிக்கப்படுவதற்குமே ஒழிய வேறொன்றுக்கும் உதவாது. 14. நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்; மலையின் மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்கமாட்டாது.
இயேசு வாக்குத்தத்தம் செய்த நீரூற்று இதுதானோ?
*கூடுதலாகக் கீழ்க்கண்ட அடிப்படை வசனங்களையும் படித்துப் பார்த்து நமக்கு கேள்விகளுக்கு விடை கிடைக்கிறதா என்று பார்க்கலாமா?*
*3.5 அடிப்படை வசனம் #2*
வெளி 22:17 ஆவியும் மணவாட்டியும் வா என்கிறார்கள்; கேட்கிறவனும் வா என்பானாக; தாகமாயிருக்கிறவன் வரக்கடவன்; விருப்பமுள்ளவன் ஜீவத்தண்ணீரை இலவசமாய் வாங்கிக்கொள்ளக்கடவன்.
*3.6 அடிப்படை வசனம் #3*
வெளி 21:6 அன்றியும், அவர் என்னை நோக்கி: ஆயிற்று, நான் அல்பாவும் ஓமெகாவும், ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன். தாகமாயிருக்கிறவனுக்கு நான் ஜீவத்தண்ணீரூற்றில் இலவசமாய்க் கொடுப்பேன்.
*3.7 மேற்குறிப்பிட்டுள்ள 2, 3 அடிப்படை வசனங்களின் மூலம் நமக்குத் தெரிவதென்ன?*
1) ஜீவத்தண்ணீருக்கு அதிபதி இயேசுதான்.
2) ஜீவத்தண்ணீர் நமக்கு இலவசமாகக் கிடைக்கும் என இயேசு வாக்குத்தத்தம் செய்துள்ளார். இது காசு கொடுத்துப் பெறுவதல்ல. இயேசுவிடம் மட்டுமே கிடைக்கும். தேவதூதர்களிடமும் இது கிடையாது. எந்த மனுஷனும் இந்த ஜீவத்தண்ணீரை நமக்குத் தரமுடியாது. ஆமென்.
3) தாகமாயிருக்கிறவன் இயேசுவிடம் போனால் அவர் ஜீவத்தண்ணீரை இலவசமாய் கொடுக்கிறார். இது வெளி 22:17 மூலமாக மனுஷருக்கு வாக்குத்தத்தமாக கொடுக்கப்பட்டுள்ளது. தாகமாயிருக்கிறவன் இயேசுவிடம் போனால்தான் அந்த ஜீவத் தண்ணீர் கிடைக்கும். சும்மா வெறுமனே உட்கார்ந்திருந்தால் அந்த ஜீவத் தண்ணீர் கிடைக்காது.
4) தாகமாயிருக்கிறவனுக்கு நான் ஜீவத்தண்ணீரூற்றில் இலவசமாய்க் கொடுப்பேன் என்று வெளி 21:6 வசனத்தின் மூலமாகவும் இயேசு நமக்கு வாக்குத்தத்தம் செய்துள்ளார். அவர் மீது தாகமாயிருக்கிறவனுக்கு இது கிடைக்கும். அவர் மீது தாகமில்லாதவனுக்கு இது ஒருபோதும் கிடைக்காது. (யோவான் 14:17).
5) தாகம் என்பது இயேசு மீதுள்ள விசுவாசம் என்பது சமாரிய ஸ்திரியின் விசுவாசத்திலிருந்து தெரிகிறது. அவள் இயேசுவின் வார்த்தையை அப்படியே சிறு குழந்தை போல விசுவாசித்து "ஆண்டவரே, எனக்குத் தாகமுண்டாகாமலும், நான் இங்கே மொண்டுகொள்ள வராமலுமிருக்கும்படி அந்தத் தண்ணீரை எனக்குத் தரவேண்டும்" எனக் கூறி அந்த ஜீவத் தண்ணீரைத் தனக்குத் தரவேண்டும் எனக் கேட்டாள் (யோவான் 4:15). இவளுடைய விசுவாசத்தினால் சமாரியர் அனேகர் நித்திய ஜீவனைப் பெற்றார்கள் (யோவான் 4:40-41). இவளுடைய விசுவாசம் இயேசு மீதுள்ள தாகத்துக்கு மிகப் பெரிய சாட்சியாகும்.
*3.8 பழைய ஏற்பாட்டில் ஜீவத்தண்ணீர். கர்த்தரே ஜீவத்தண்ணீர்.*
பழைய ஏற்பாட்டில் தம்மை ஜீவத்தண்ணீர் என தேவன் வருணிக்கிறார். நமக்கெல்லாம் தெரியும், இயேசுதான் பழைய ஏற்பாட்டில் இஸ்ரவேலின் தேவனாக உலாவி வந்தார். இதனை நாம் ஏற்கனவே வசனங்கள் வழியாக தியானித்துள்ளோம்.
எரேமியா 2:13 என் ஜனங்கள் இரண்டு தீமைகளைச் செய்தார்கள்; *ஜீவத்தண்ணீர் ஊற்றாகிய என்னை விட்டுவிட்டார்கள்;* தண்ணீர் நிற்காத தொட்டிகளாகிய வெடிப்புள்ள தொட்டிகளை தங்களுக்கு வெட்டிக்கொண்டார்கள்.
சங்கீதம் 36:9. *ஜீவஊற்று உம்மிடத்தில் இருக்கிறது;* உம்முடைய வெளிச்சத்திலே வெளிச்சம் காண்கிறோம்.
எரேமியா Jeremiah 17:13. இஸ்ரவேலின் நம்பிக்கையாகிய கர்த்தாவே, உம்மைவிட்டு விலகுகிற யாவரும் வெட்கப்படுவார்கள்; *அவர்கள் ஜீவனுள்ள தண்ணீரின் ஊற்றாகிய கர்த்தரை விட்டு விலகிப்போனபடியால்,* உம்மைவிட்டு அகன்றுபோகிறவர்களின் பெயர் புழுதியில் எழுதப்படும்.
எசேக்கியேல் Ezekiel 47:9. சம்பவிப்பது என்னவென்றால், *இந்த நதி போகுமிடமெங்கும் சஞ்சரிக்கும் ஜீவபிராணிகள் யாவும் பிழைக்கும்; இந்தத் தண்ணீர் அங்கே வந்தபடியினால் வெகு ஏராளமான மச்சங்களும் உண்டாயிருக்கும்; இந்த நதிபோகுமிடமெங்குமுள்ள யாவும் ஆரோக்கியப்பட்டுப் பிழைக்கும்.*
இந்த வசனங்கள், நாம் பரலோகம் போன பிறகு அவருடன் வாழும் வாழ்வைக்குறித்து சொல்லப்படவில்லை என்பது நமக்குப் புரிகிறது. இதில் குறிப்பிட்டிருக்கும் ஜீவத்தண்ணீரை இங்கு வைத்தே பெற்றுக் கொள்ளலாம் என்றும் தாகமாயிருக்கிறவன் விரும்பினால் அந்த ஜீவத்தண்ணீரை இப்போதே இயேசுவிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம் எனவும் தான் அர்த்தம் கொள்ள வேண்டும். இயேசுவைப் பற்றித் தாகமில்லாதவனுக்கு அதாவது இயேசு மீது விசுவாசமில்லாதவனுக்கு ஜீவத்தண்ணீர் கிடைக்காது. அதேபோல விருப்பமில்லாதவனும் இயேசுவிடம் ஜீவத்தண்ணீரை இலவசமாய் வாங்கிக்கொள்ள இயலாது. இயேசுவிடம் போகாதவனுக்கும் இந்த ஜீவத்தண்ணீர் கிடைக்காது.
*3.9 இவரே ஜீவத்தண்ணீர்:*
"இந்த நதிபோகுமிடமெங்குமுள்ள யாவும் ஆரோக்கியப்பட்டுப் பிழைக்கும்” (எசே. Ezekiel 47:9) - “அவர் நன்மை செய்கிறவராயும் பிசாசின் வல்லமையில் அகப்பட்ட யாவரையும் குணமாக்குகிறவராயும் சுற்றித்திரிந்தார்”.
*அப்போஸ்தலர் 10:38 நசரேயனாகிய இயேசுவைத் தேவன் பரிசுத்த ஆவியினாலும் வல்லமையினாலும் அபிஷேகம்பண்ணினார்; தேவன் அவருடனேகூட இருந்தபடியினாலே அவர் நன்மைசெய்கிறவராயும் பிசாசின் வல்லமையில் அகப்பட்ட யாவரையும் குணமாக்குகிறவராயும் சுற்றித்திரிந்தார்.*
ஜீவத்தண்ணீராகிய இயேசு இருக்கும் வாழ்வில் ஆராேக்கியம் இருக்கும் (யோவான் 10:10b), சமாதானம் இருக்கும் (யோவான் 14:27), விடுதலையும் இருக்கும் (யோவான் 8:31-32).
*இயேசு தரும் உத்திரவாதம் : “என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனெவனோ அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும்”*
*3.10 அடிப்படை வசனம் #4*
யோவான் 7:38 வேதவாக்கியம் சொல்லுகிறபடி என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனெவனோ அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும் என்றார்.
இதற்கு அடுத்த வசனத்தில் ஜீவத்தண்ணீர் உருவாவதற்கு முக்கிய காரணி பரிசுத்த ஆவி என்பது தெரிய வருகிறது.
யோவான் 7:39. *தம்மை விசுவாசிக்கிறவர்கள் அடையப்போகிற ஆவியைக்குறித்து இப்படிச் சொன்னார்.* இயேசு இன்னும் மகிமைப்படாதிருந்தபடியினால் பரிசுத்த ஆவி இன்னும் அருளப்படவில்லை.
யோவான் 7:38 வசனத்தில் அவர் வாக்குத்தத்தம் பண்ணியுள்ள "அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும்" என்பது அவர் சமாரிய ஸ்திரியிடம் கூறியுள்ளதை உறுதிப்படுத்துவதாக இருக்கிறது (யோவான் 4:14).
பரிசுத்த ஆவியும் இயேசுவும் ஒருவரே! (யோவான் 14:26,23 ; 16:14)
யோவான் 4:14 நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருக்காலும் தாகமுண்டாகாது; *நான் அவனுக்குக் கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே நித்தியஜீவகாலமாய் ஊறுகிற நீரூற்றாயிருக்கும் என்றார்.
FOR CONTACT US: DISCIPLE OF CHRIST BIBLICAL RESEARCH TEAM- INDIA
FOR MORE MAIL : ajithbenihin007@gmail.com
FOR ARTICLE BLOGSITE: ajithbenihin.blogspot.com
FOR FOLLOW THE TWITTER: https://twitter.com/ajithbenihin
FOR MORE DEATIALS 9994423774
Amen....
ReplyDelete